உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“எப்படியாவது இந்தத் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்பதில் இந்த அரசு குறியாகவே இருக்கின்றது. அதற்காக இதுவரை பல காரணங்களைக் கூறி வந்தது. இறுதியாக பணம் இல்லை என்று கூறி வருகின்றது.
தேவையற்ற விடயங்களுக்கு அதிக பணத்தைச் செலவு செய்கின்றது அரசு. வீண் விரயம் செய்கின்றது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பணத்தை வாரி இறைக்கின்றது.
ஆனால், மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு மட்டும் பணம் இல்லையாம். அது பொய். தேர்தலை ஒத்திப்போடுவதற்காக அரசு இறுதியாகக் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அது.
தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களை திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம். பணத்தை வழங்கும்வரை விடமாட்டோம்” – என்றார்.