மதுபோதையில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
22, 25, 35, 41 வயதுடைய நபர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களில் 25 வயதுடைய இளைஞர் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்தார் எனவும், அவரின் வீட்டிலேயே நண்பர்கள் நேற்றிரவு ஒன்றுகூடி மதுபானம் அருந்தியுள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்பகை கொண்ட இரு தரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த மோதல், இறுதியில் வாள்வெட்டில் நிறைவடைந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 8 பேரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.