இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நிலையம் (ஐ.வி.எஸ். – கொழும்பு) காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் அலுவலகம் (தூதரகம்) தெரிவித்துள்ளது.
நிலையத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு வரம்பு மீறல் சம்பவத்தைத் தொடர்ந்தே அது மூடப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பங்கள் தொடர்பில் ஏற்கனவே திகதிகளைப் பெற்றிருந்த விண்ணப்பதாரிகள் மீண்டும் புதிய திகதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஐ.வி.எஸ். நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
அவசர விசா அல்லது தூதரக தேவைகள் உடையவர்கள் தொலைபேசி மூலம் இந்திய உயர் ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முடியும்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய வீசா நிறுவனத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திருட்டு இடம்பெற்றுள்ளது என்று முறையிடப்பட்டுள்ளது. நிலையத்தில் காணப்பட்ட மடிக்கணனி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் 3 திருடப்பட்டுள்ளன என்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அங்கு யாரும் காணப்படவில்லை என்றும் , சி.சி.ரி.வி. காணொளிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.