“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கையும் கிழக்கையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலே இலங்கை அரசு எப்போது தாரைவார்த்தது? வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவராக மோடி எப்போது பிரகடனப்படுத்தப்பட்டார்? அண்ணாமலையின் கருத்துக்கள் ஊடாக எம்மிடம் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.
அண்ணாமலை அண்மையில் இலங்கை வந்து தமிழகம் திரும்பிய பின்னர் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதன் பின்புலம் தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒரு தரப்பினர் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்த, அண்ணாமலை மோடியையும் வடக்கு – கிழக்கையும் இணைத்துப் பேசி அரசியல் நடத்துகின்றார். இலங்கை அரசு இவற்றையெல்லாம் கைகட்டி ஏன் வேடிக்கை பார்க்கின்றது? எல்லாம் மர்மமாகவே உள்ளது” – என்றார்.