வவுனியா, ஒலுமடு – வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழித்தொழிக்கப்பட்ட ஈனச் செயல் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படுபாதகச் செயலுக்கு எதிராகப் பலமுனைப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இது தொடர்பில் நல்லூர் ஆலயச் சூழலில் இன்று மாலை 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று சைவமகா சபையின் பொதுச் செயலர் மருத்துவர் பரா.நந்தகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை சுதந்திரமடைந்த பின்னரே எமது பழமைச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. முல்லைத்தீவிலும், வன்னியிலும், மன்னாரிலும் சைவத்தமிழர்கள் பல்வேறு விதமாக தொடர்ந்தும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திருநீறு பூசுவதையும் நடராஜர் சிலை வைப்பதையும் பற்றி பேசும் நாங்கள் இந்த விடயங்களில் கரிசனை கொள்வதில்லை.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுக்கப்பட வேண்டும். இந்த நிலையிலே நாம் போராட்டத்தை மேற்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை நிறுத்த அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென சர்வதேசத்துக்கும் செய்தியைச் சொல்கின்றோம்” – என்றார்.