சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் குறித்த நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து பகிடிவதை என்ற பெயரில் அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தினர் என்று கைதான சிரேஷ்ட மாணவர்கள் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நான்கு மாணவர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பலாங்கொடை பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.
தெஹிவளை, மொரட்டுவை, அம்பலாங்கொடை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.