புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முன்னாள் சபாநாயகரின் பூதவுடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி!

முன்னாள் சபாநாயகரின் பூதவுடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி!

1 minutes read

மூத்த அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இன்று (30, அவரது பூதவுடல் தாங்கிய விசேட வாகனம், பொலிஸ் வாகனத் தொடரணியுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், செங்கம்பளத்தின் ஊடாக நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் அமைந்துள்ள விசேட வைபவ மண்டபத்துக்குப் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் மலர்வலயங்களை வைத்து அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், முன்னாள் சபாநாயகர்கள், அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர், படைக்களசேவிதர், தூதுவர்கள் உட்பட நாடாளுமன்றத்தின் அனைத்து ஊழியர்களும் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முற்பகல் 9 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்ட முன்னாள் சபாநாயகரின் பூதவுடல் 10 மணி வரை நாடாளுமன்ற விசேட வைபவ மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அதிதிகளின் ஞாபகார்த்த புத்தகத்தில் குறிப்பொன்றை இட்டதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் நினைவுக் குறிப்புகளை இட்டனர்.

1941 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ஜோசப் மைக்கேல் பெரேரா, 2001 டிசம்பர் 19 முதல் 2004 பெப்ரவரி 07 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராகப் பணியாற்றினார்.

1967 – 1970 காலகட்டத்தில் ஜா – எல நகர சபையின் உப தவிசாளராகவும், 1970-1971 இல் ஜா-எல நகர சபையின் தவிசாளராகவும் அவர் பணியாற்றினார்.

1971 முதல் 1976 வரை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாகவும், 1978 – 1988 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.

மறைந்த ஜோசப் மைக்கல் பெரேரா, 1989 முதல் 2015 வரை உள்நாட்டலுவல்கள் அமைச்சர், தொழிலாளர் அமைச்சர், மீன்பிடி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More