ஆஸ்திரேலிய பூர்வகுடிமக்களின் நில உரிமைகளுக்காகக் கடந்த ஆறு தசாப்தங்களாகப் போராடிய யுனுபிங்கு (Yunupingu ) தனது 74 ஆவது வயதில் இன்று காலமானார்.
ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த காலனியாதிக்கவாதிகள், கொடூரமான இன அழிப்பின் ஊடாக பூர்வீக மக்களின் நிலங்களைச் சுவீகரித்துக்கொண்டது மாத்திரமல்லாமல், பெருந்தொகையான வளங்களையும் கொள்ளையடித்து, தாங்கள் சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கத்தொடங்கியிருந்தார்கள். அறுபதுகளின் இறுதியில் இந்த நிலமை மெல்ல மெல்ல மாறி, எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் வெள்ளையின ஆட்சியாளர்கள், பல்-கலாச்சார – இன சமத்துவ அடையாளங்களை ஒப்புக்காவது தங்கள் ஆட்சியில் சூடிக்கொள்வதற்குத் தலைப்பட்டார்கள்.
ஆஸ்திரேலியாவின் வட துருவத்தில் (Northern Territory) காடுகளில் வாழந்த Yolngu இனத்திலிருந்து வந்த யுனுபிங்கு அப்போதுதான் தனது மக்களின் உரிமைகளுக்காக வெள்ளையின ஆட்சியாளர்களுடன் பேசத்தொடங்கினார். தனது தகப்பனாரின் முயற்சியினால், பள்ளி சென்று ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு, நீதிமன்றங்களின் மொழிபெயர்ப்பாளராகத் தனது பணியைத் தொடங்கிய யுனுபிங்கு, படிப்படியாக தனது மக்களின் பிரச்சினைகளை அரசு மட்டத்துடன் பேசுவதற்கும் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் வீதியில் இறங்கினார்.
கனிய வளங்கள் நிறைந்த பூர்வீக நிலங்களை வெளிநாட்டுக்கம்பனிகள் உறிஞ்சிச் சென்றுவிடாத வண்ணம், அபொறிஜினல் மக்களுக்கான காணி அதிகார சபையொன்றை உருவாக்கி, அதன் ஊடாக ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் தன்
மக்களுக்குரிய செல்வத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு, யுனுபிங்கு எடுத்த வரலாற்று நகர்வுதான் இன்றுவரை அவரைப் பெயர் சொல்லும் தலைவராக முன்நகர்த்தியது.
யூரேனியம் படிமங்கள் கொண்ட சுரங்கங்கள், தங்கச் சுரங்கங்கள் என்று ஆஸ்திரேலியாவின் பூர்வீகச் சொத்துக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டிய சட்ட ரீதியான கட்டாயத்தை யுனுபிங்கு உருவாக்கினார். அரசாங்கம் அதனைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோது – வழக்கம்போல – பூர்வீக மக்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் உட் தகராறுகள் கிளம்பியபோது, அவற்றையும் யுனுபிங்கு தீர்த்துவைத்தார்.
தனது மக்களின் அடையாளங்களையும் மொழியையும் காலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவந்தார். ஆஸ்திரேலியர்கள் யுனுபிங்குவை “ஜேம்ஸ்” என்று அழைத்தார்கள். அவரை இயன்றளவுக்கு வெள்ளையடித்து மடக்கலாம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தெரிந்த எல்லா தந்திரங்களையும் ஏவிப்பார்த்தார்கள். ஆனால், யுனுபிங்கு தன் மக்களுக்காகத் தொடர்ந்து திமிறிக்கொண்டிருந்த புலிபோல காட்டுக்கும் நாட்டுக்குமாக அலைந்து திரிந்தார்.
அதற்குப்பிறகும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆஸ்திரேலிய அரசுகள் அனைத்தும் ஒரேயடியாக ஞானம் பெற்று, பூர்வ குடிகளை அள்ளி அரவணைத்துக்கொள்ளவில்லை. (அது இன்றுவரை முழுமையாக நடைபெறவில்லை என்பது வேறு விடயம்) பூர்வீக மக்களுக்கு எந்த திசையில் எலும்பை எறிந்து, எந்த ஒழுங்கைக்குள்ளால் சென்று அவர்களின் நிலங்களை உருவலாம் என்று அரசுத்தரப்பினர் சிரித்து சிரித்துப் பல திட்டங்களைப்போட்டார்கள். அவை எல்லாவற்றுக்கும் பெருந்தடையாக யுனிபிங்கு நின்றுகொண்டிருந்தார்.
யுனிபிங்கு தனது மக்களின் எழுச்சிக்காக முன்வைத்த பல முக்கிய திட்டங்களை, ஆஸ்திரேலிய அரசு இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பதவியேற்ற எல்லா பிரதமர்களும் யுனுபிங்குவைத் தேடிச்சென்று – மூத்த தலைவர் என்ற மரியாதையோடு – கை கொடுத்து பியர் குடித்தார்களே தவிர, அதற்கு அப்பால் எதுவும் நடக்கவில்லை. இந்தத் தொடர்ச்சியான நிராகரிப்புக்களால் யுனுபிங்கு மிகவும் சீற்றமடைந்தார். ஒரு கட்டத்தில், அரசாங்கத்தோடு செய்துகொண்ட “பருங்கா ஒப்பந்தம்” என்ற முக்கிய இணக்கப்பாட்டு முன்மொழிவுப் பத்திரத்தை, தங்களது நிலத்தில் வெட்டிப் புதைக்கப்போவதாகவும் அந்தச் சம்பவம் எதிர்கால சந்ததிக்கு உண்மைகளைச் சொல்லட்டும் என்றும் கொதித்தார். ஆனால், ஒருபோதும் அரசோடு மேற்கொண்டுவந்த பேச்சுக்களையோ தனது மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களையோ கைவிடவில்லை.
பூர்வீக மக்களுக்கான ஆட்டுப்பண்ணைகள், மர ஆலைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியற்றை அமைத்தார். பூர்வீக மக்களின் முதலாவது கனிய வள கம்பனியை உருவாக்கினார். அரசாங்கம் எதைச் செய்தாலும் அதன் அக – புற விளைவுகளை புரிந்துகொள்ளும் தூரத்தில் நின்றுகொண்டார். தனது மக்களுக்கும் அந்தத் தந்திரத்தைக் கற்றுக்கொடுத்தார். இளையவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த சிரத்தையோடு இயங்கினார்.
யுனுபிங்கு அரசியல் தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் மாத்திரமல்ல. நல்ல ஓவியர். பாடகர். இசைக்குழுவொன்றை வைத்திருந்தார். மக்களோடு நன்கு கரைந்துகொண்ட தலைவராக அவர்களின் உணர்வுகளோடு கலந்திருந்தார். யுனுபிங்குவின் நான்கு மனைவிமாரில், இருவர் இறந்துவிட்டார்கள். நால்வருக்கும் சேர்ந்து பன்னிரண்டு பிள்ளைகள். பல பேரன் பேர்த்திமார். பூட்டன் – பூட்டி என்று பெரியதொரு குடும்பத்தின் பன்னெடுங்காலத் தலைவர்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இத்தேசத்திடம் உரிமைகோரிக் கூவிய பெருங்குரல் இன்று ஓய்ந்துவிட்டது. பூர்வீக மக்களுக்கு இன்று துயர் மிக்க தினம்.
ப. தெய்வீகன்