கடும் மழையுடனான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்றும் விமான நிலையத்துக்கு உள்வரும் சில விமானங்களின் பயணங்கள் தாமதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை 4.45 மணிக்கு, டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த UL226 என்ற விமானம், இன்று மாலை 4.55 மணிக்கு நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன், நேற்றிரவு 7 மணிக்கு, ஜப்பான் நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை 1.50 மணிக்குப் புறப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.40 மணிக்கு மும்பை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை 5.35 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதேநேரம், சீனாவில் இருந்து வந்த எம்.எல். 231 என்ற விமானம் மாலைதீவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், குவைத்தில் இருந்து வந்த யு.எல். 230 என்ற விமானம் மத்தள விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால், 15 மணித்தியாலங்கள் தாமதமாகி டுபாய் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று காலை மீளவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
யு.எல். 225 என்ற விமானம், 189 பேர் மற்றும் 15 பணிக்குழாமினருடன் நேற்று மாலை 6.25 மணிக்கு டுபாய் நோக்கிப் பயணிக்க இருந்த நிலையில், சீரற்ற காலநிலையால், இன்று முற்பகல் 9.30 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்தது.
எனினும், பயணத்தை ஆரம்பித்து ஒரு மணித்தியாலமும், 10 நிமிடத்தின் பின்னர், அதாவது, முற்பகல் 10.40 மணிக்குக் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீளவும் தரையிறங்கியது.
இந்தியாவுக்கு அண்மையில் பயணித்துக் கொண்ருந்த போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, குறித்த விமானம் மீளத் திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில், இன்று கடும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.