“மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது. பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகியவற்றை அரசு கொண்டுவரும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் ஒரு கட்சியின் தலைவர். கட்சியுடன் பேசித்தான் கட்சி தொடர்பான நிலைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். எனினும், மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெறும் கட்சி அல்ல. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசும் கூட.
மொட்டு ஆட்சி சர்வாதிகார அரசு இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும். மக்கள் பக்கம் நின்று நாட்டின் நலன் கருதியே நாம் முடிவு எடுப்போம்.” – என்றார்.