“வெப்பமான காலநிலை நிலவுவதால் நோயாளிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. சூரியன் தற்போது உச்சம் கொடுப்பதால் மத்தியான நேரங்களில் வெளிப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன் தினமும் 2 தொடக்கம் 3 லீற்றர் வரை தண்ணீரை அருந்த வேண்டும்.”
– இவ்வாறு யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:–
“போதியளவு நீராகாரங்கள் அருந்த வேண்டும். நீர்த் தன்மையுள்ள பழங்களான வெள்ளரிப்பழம், கெக்கரி போன்றவற்றை உண்ண வேண்டும். நமது சூழலில் காணப்படும் நிழல் தரும் மரங்கள் மிக முக்கியமானதாகும். இவற்றை இந்தத் தருணத்தில் நாங்கள் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மருந்துத் தட்டுப்பாடு தற்போது நீங்கி உள்ளது. கிளினிக் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற இன்சுலின் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவியது. தற்போது சுகாதார அமைச்சிலிருந்து அந்த மருந்துகள் கிடைத்துள்ளன. சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.” – என்றார்.