யாழ். தீவகத்தின் நுழைவாயிலாகவுள்ள பண்ணை சுற்றுவட்டத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் என்று கோருவதற்கு இந்து அமைப்புக்கள் ஒன்றுகூடித் தீர்மானித்துள்ளன.
நல்லை ஆதீனத்தில் நேற்று மாலை இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல் நடத்தினர்.
பண்ணையில் சித்திரைப் புத்தாண்டு அன்று வைக்கப்பட்ட நாகபூஷணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். சிலை வைக்கப்பட்டமையால் இன, மத குழப்பம், சமாதானச் சீர்குலைவு ஏற்படக்கூடும் எனவும் அறிக்கையிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் இன்றைய தினம் சிலைக்கு உரிமை கோராவிடின் அது அகற்றப்படும் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை கூடி ஆராய்ந்தனர். இதன்போது, மேற்படி சிலையை அகற்றுவதற்கு நீதிமன்றில் இன்று தோன்றி ஆட்சேபம் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்படும்போது அனைத்துச் சட்டத்தரணிகளையும் முன்னிலையாகுமாறும் இந்து அமைப்புகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.