களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரதேசத்தில் இருவர் மீது பாரவூர்தி மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை, வெந்தேசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இமாஷா கருணாதிலக்க என்ற யுவதி எனத் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் நேற்றிரவு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மீன் வாங்குவதற்காக, கல் அஸ்ஹேன சந்தியில் தாம் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
அதன்போது, களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று இருவரையும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது யுவதி உயிரிழந்தார்.
இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த இளம் ஜோடியினர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாரவூர்தி சாரதி களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.