அதிகளவில் வெப்ப நிலை நிலவும் நேரமான முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொது வெளியில் எந்தவொரு செயற்பாடுகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வி.ஆரியரத்ன தெரிவித்தார்.
அத்தோடு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் இந்தக் காலப்பகுதியில் எந்த வகையான வெளிக்கள செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
குழந்தைகள் , சிறுவர்கள் , கர்பிணிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் இந்த வெப்பநிலை அதிகரிப்பினால் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும். இவ்வாறான பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு தாகம் ஏற்படும் வரை காத்திருக்காது தேவையானளவு நீர் அருந்த வேண்டும். அதாவது 2.5 லீற்றர் நீர் அருந்த வேண்டும்.
எனினும் குளிர் பானங்கள் அருந்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவான , இளம் நிறத்திலான ஆடைகளை அணிவதால் அதிக வெப்ப நிலையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடியும். குறிப்பாக முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளிக்கள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் வெளிக்கள செயற்பாடுகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதேவேளை நாட்டின் பல மாவட்டங்களில் மனிதர்களின் உடல் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுகிறது. அதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களிலும் , மொனராகலை , இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு வெப்பநிலை அதியுயர் மட்டத்தில் காணப்படுகின்றமைக்கான காரணம் காற்றின் வேகம் மிகக் குறைவாக உள்ளமையாகும். பெரும்பாலும் மே மாதத்தின் 3ஆம் அல்லது 4ஆம் வாரத்திலேயே இந்நிலைமை மாற்றமடையக் கூடும் என்று குறித்து வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.