விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை புறக்கணித்து மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இராட்சக ஆசியர்கள் தொடர்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீன உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சில ஆசிரியர்கள் அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் சிக்கி பாடசாலை மாணவர்கள் தொடர்பில் சிந்திக்காது பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்கின்றனர்.
கொரோனாவால் ஒன்றரை வருடங்கள் கற்கை நடவடிக்கை இன்றி இருந்து மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது ஸ்டாலின் போன்றோர் சம்பள அதிகரிப்பு கோரி போராட்டம் நடத்தினர்.
இவர்களுக்கு 5ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. பரீட்சை நடத்தும் போதும் போராட்டம் நடத்தினர். பின்னர் விடைத்தாள் திருத்தும் போதும் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகின்றது.
அப்பாவி மாணவர்களுக்காக கதைப்பதற்கு எவரும் இல்லை. தொழிற்சங்க தலைவர்களே நிலைமைக்கு காரணம். இவர்கள் ஆசிரியர்களை திசை திருப்பி மாணவர்களின் எதிர்காலத்தை பின்னால் தள்ளி சீரழிக்கின்றனர்.
இவர்கள் ஆர்ப்பாட்டத்தையே செய்துகொண்டிருந்தால் நாட்டின் நிலை என்னவாகும் இதனால் ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.
42 இலட்சம் மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பணம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி பிரச்சினை இருக்காது.
இவ்வாறான போராட்டங்கள் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகளுக்கே பாதிப்பாக அமையும். இதனால் இவர்களுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் இவர்களுக்கு எதிராக வீதிக்கிறங்கவேண்டும்.
அவர்களின் நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதி, நீதி அமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களின் போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் பணம் இருக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்பு நடத்தி வருகின்றனர். அதனால் இந்த இராட்சக ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் மேற்காெண்டால், அந்த சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.