செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு கிழக்கு மக்கள் அஹிம்சை வழியில் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர் | சத்திவேல்

வடக்கு கிழக்கு மக்கள் அஹிம்சை வழியில் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர் | சத்திவேல்

2 minutes read

அஹிம்சை வழியில் மக்கள் கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். இதனை கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஹர்தாலுக்கு அனைத்து தரப்புக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி அஹிம்ச வழியில் தமது கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர்.

இக் கோப வெளி காட்டலை தங்கள் தலைமைத்துவ கூட்டுக்கு அல்லது கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக எவரும் கருதக்கூடாது.

அதே போன்று ஆட்சியாளர்கள் தங்களுக்கும் கொழும்பு அரசியலுக்கும் எதிராக தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டால் மட்டுமே நாட்டில் அரசியல் நிலை தன்மை ஏற்படும் என்பதையும் உணர்தல் வேண்டும்.

இதனை இனவாத, மதவாத கண்ணோட்டத்தில் புலிகளின் எழுச்சி என முத்திரை குத்த வேண்டாம் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஹர்தாலுக்கு முதல் நாள் அது தொடர்பில் தமது அதிருப்தினையும், எதிர்ப்பினையும் ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்க “பௌத்த ஆக்கிரமிப்பு நடக்கவில்லை” என முழு பூசணிக்காய் ஒருபிடி சோற்றுக்குள் மறைக்க முற்படுவது போன்று கூறியுள்ளார். இது தமிழர்களை அழிப்பதற்கு இவர்கள் தொடர்ந்தும் செயற்படுவார்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றது.

அத்தோடு 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தினம் நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொட்டியா (புலி) என அடையாளப்படுத்தி உள்ளனர்.

இது நீண்ட காலமாகவே தொடரும் ஒரு விடயமாகும். அரசியல் கைதிகளை மண்டியிட செய்தி நெற்றியில் துப்பாக்கி வைத்து கொட்டி (புலி) யென கொலை அச்சுறுத்தியவர்கள், ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதியாக்கி சிறைக்குள் தள்ளியவர்கள் திறந்தவெளி சிறைக்குள் வைத்தவர்கள் அதே நிலையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே மீண்டும் நாடாளுமன்ற நிகழ்வு காட்டுகின்றது.

அவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படும் வரை நாட்டிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை. அதே போன்று தமிழர்களுக்கும் எதிர்காலம் இல்லை என்று கூறலாம்.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பினை தேசிய அரசியலுக்கான சக்தியாக விழிப்புணர்வு செய்து அதனை பெரும் சக்தியாக பரிணமிக்க வழி செய்ய வேண்டும். இதனை செய்யக்கூடிய தகுதி ஒற்றை ஆட்சியையும் 13 ஆவது திருத்தத்தையும் ஏற்றுக் கொள்கின்றவர்களால் செய்ய முடியாது.

இவ்விரண்டையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழர்களை அச்சுறுத்துவதற்கோ, அடிபணிய வைப்பதற்கோ, உலகில் ஜனநாயக நாடகக் கூறப்படும் இந்தியாவிற்கு உரிமையும் இல்லை என்பதையும் பகிரங்கமாக இவ்வேளையில் வெளிப்படுத்த வேண்டும்.

அதேபோன்று தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்றவர்களாலும், ஒற்றை ஆட்சியையும் 13 திருத்தத்தையும் பாதுகாக்கவும் அதற்கு கொடி பிடிக்கவும் துணை நிற்பவர்களால் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்கவும் முடியாது.

நடந்த எதிர்ப்பு ஹர்தாலை முழு வெற்றியாக்க தமிழ் அரசியல் தலைமைகளும், சிவில் சமூகமும் ஒன்று இணைந்து கூட்டு செயல்பாட்டிலே ஈடுபடல் வேண்டும்.

இவ்வாறான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் நாம் தவறவிட்டுள்ளோம் என்பதே உண்மை. இதனைக் கருத்தில் கொண்டு திறந்த மனதோடு அரசியல் கட்சிகள் மக்கள் முன் நிற்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதுவே தமிழர்களின் அடையாளத்தையும், தேசியத்தையும் பாதுகாக்கும் செயற்பாடாக அமையும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More