முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய வட மேல் மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் இந்த முடிவு தொடர்பான கடுமையான கவலைகளைத் தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கையானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசு மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது.
இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக – பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை அரசு தொடரும் என்று அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வசந்த கரன்னாகொட, கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில், மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், வெளிநாட்டு நடவடிக்கைகள் சட்டம் 2023 இன் பிரிவு 7031(c) இன் படி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் விளைவாக, வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர்கள் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த கரன்னாகொட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டானது, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது தீவிரமானது மற்றும் நம்பகமானது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.