“பொதுமுடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுமுடக்கம் முன்னெடுக்கப்பட்டது. மக்களின் பேராதரவுடன் பொதுமுடக்கம் வெற்றிபெற்றது. இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பொதுமுடக்கத்தை ஒரு தரப்பினர் வெற்றி என்று சொல்வார்கள். மற்றொரு தரப்பினர் தோல்வி என்பார்கள். ஆனால், பொதுமுடக்கத்தை அமைதியாக மக்கள் முன்னெடுத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது” – என்றார்.