மலையகப் பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய மே தினத்தில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தவில்லை.
செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தவில்லை என்று அந்தந்தக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கட்சி மே தினக் கூட்டங்களையோ கொண்டாட்டங்களையோ நடத்தாமல், அதற்குப் பதிலாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை எதிர்காலத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த மே தினத்தில் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தாமல் மாறாகத் தோட்டங்களுக்குள் சமய நிகழ்வுகளை நடத்துகின்றது எனக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏ. பி. சக்திவேல் கூறினார்.
தேசிய தொழிலாளர் சங்கம் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தாமல் தோட்டங்களில் சிறு கொண்டாட்டங்களை நடத்துகின்றது என அதன் பிராந்திய பணிப்பாளர் என். ஆர். இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.