முறைசாராத்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஹட்டனில் இன்று நடைபெற்றது.
ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
வீட்டுத் தொழிலாளர்களும் தொழிலாளர்களே, அவர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் பதாகைகள் ஊடாகக் காட்சிப்படுத்தபட்டிருந்தன.