ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரிட்டன் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகின.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், ஆளுநர் பதவிகளைக் கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பின்னர், அவற்றின் நிர்வாகம் ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில், ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர், தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர், ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதால், தன்னைப் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தின் குறித்த உயர் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், ஏனைய மாகாண ஆளுநர்களுக்கு ஆளுநர் பதவியிலிருந்து விலகக் கோரும் அறிவித்தல் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.