உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோருவது நியாயமான செயலன்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எடுத்ததெற்கெல்லாம் இனவாத, மதவாதக் கருத்துக்களை கக்குவதை தமிழ்க் கட்சிகள் உடன் நிறுத்த வேண்டும்.
அமைதி வழியில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் தமிழ் மக்களை போராட்டம் என்ற போர்வையில் அவர்களை வன்முறைக்கு இட்டுச் செல்வதுதான் தமிழ்க் கட்சிகளின் இலக்காக இருக்கின்றது.
உங்கள் அரசியல் சித்துவிளையாட்டுக்களுக்காகத் தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்காதீர்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை உரிய அனுமதிகளைப் பெற்று அமைக்கப்பட்டது. அதனை அகற்றக் கோருவது எந்த வகையிலும் நியாயமானதில்லை.” – என்றார்.