“இருக்கின்ற அரசே கவிழும் நிலையில் உள்ள போது எப்படி தேசிய அரசு சாத்தியப்படும்?” – என்று கேள்வி எழுப்புகின்றார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.
தேசிய அரசு உருவாக்கப்பட்டால் அதில் ஐக்கிய மக்கள் சக்தி இணையுமா என்று அவரிடம் கேட்ட போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு ஏனைய கட்சிகளில் உள்ள எம்.பிக்களுக்கு வலை வீசி வருகின்றது. அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு
இருந்தால் – மொட்டுக் கட்சியின் முழுமையான ஆதரவு இருந்தால் எதற்காக அடுத்த கட்சிகளின் எம்.பிக்களுக்கு வலை வீச வேண்டும்?
மக்கள் கஷ்டத்தில் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் கோடிக்கணக்கான பணம் கொடுத்து எம்.பிக்களை வாங்குவதற்கான தேவை ஜனாதிபதிக்கு ஏன் எழுந்துள்ளது?
அரசுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. அது ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. இருக்கின்ற அரசே உடையும் நிலையில் இருக்கும் போது தேசிய அரசு எப்படிச் சாத்தியப்படும்?
தேசிய அரசு உருவானாலும் உருவாகாவிட்டாலும் நாம் அதில் இணையமாட்டோம். தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான மக்கள் ஆணை ஒன்றைப் பெற்ற சக்தி வாய்ந்த அரசை நாம் அமைப்போம்.” – என்றார்.