ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால், இன்றைய சந்திப்பில் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அந்த முடிவை ஜனாதிபதி மாற்றியுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோருடன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.