களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சம்பவ தினத்தன்று மாணவியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
எனினும், அவரது தொலைபேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவி உயிரிழந்ததையடுத்து பிரதான சந்தேகநபர், முன்னதாக விடுதியிலிருந்து சென்ற தமது நண்பரையும், நண்பரின் காதலியையும் மீண்டும் சம்பவ இடத்துக்கு வரவழைத்து, மாணவியின் தொலைபேசியை ரயில் மார்க்கத்துக்கு அருகிலுள்ள கால்வாய் நோக்கி வீசினார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் பல விடயங்களைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சந்தேகநபர் கூறினார் என்று விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“நாங்கள் இருவரும் ஒன்றாக அறையில் இருந்தோம். அவள் விருப்பத்துடன் என்னுடன் தங்கினாள். சிறிது நேரம் கழித்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் பின்னர் அவள், ‘அசிங்கமான காரியங்களைச் செய்யாதே, நான் இப்போது சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?’ என்று கத்த ஆரம்பித்தாள். பின்னர் திடீரென ஜன்னல் அருகே இருந்த கதிரையில் ஏறி ஜன்னல் வழியாகக் குதித்தாள்” என்று பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இருவரும் மனமுவந்து அறையில் இருந்தனர் என்றும், பிரதான சந்தேகநபரால் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர், படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார் என்றும் விசாரணைகளில் அம்பலமானது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.