யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலாக உள்ள செம்மணியில் 30 ஏக்கர் அரச காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரிமம் மாற்றம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சாதகமான பதிலை வழங்கவில்லை. உரிமம் மாற்றம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து முடிவெடுப்பது என்று ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.
செம்மணியில் 290 ஏக்கர் நிலம் உப்பளத்துக்குச் சொந்தமானது. அந்தப் பகுதியில் யாழ்ப்பாணம் நகரத்தின் நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்க நல்லாட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. பஸ் நிலையம், அரச திணைக்களங்கள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டுத் திடல் என்பன அமைக்க முன்மொழியப்பட்டிருந்தாலும், அந்த நிலம் தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்வதற்குப் பெருந்தொகைப் பணம் தேவையென்பதால் அது கிடப்பில் போடப்பட்டது.
தனியார் முதலீட்டாளர் ஒருவர் செம்மணியில் 30 ஏக்கரில் விளையாட்டுத்திடல் அமைப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளார். அந்தக் காணி தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை இணங்கியுள்ளது. அதனைத் தாம் முன்னெடுப்பதனால் அரச காணியான அதனை தமது திணைக்களத்துக்கு உரிமம் மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரியுள்ளது.
இதற்கு அமைவாகமே மேற்படி கோரிக்கைக்கான அனுமதி கோரி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான அனுமதி கடந்த வாரம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வழங்கப்படவில்லை.