கம்பளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல்போயிருந்த இளம் யுவதியைத் தான் கொலை செய்தார் என்று சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்ற குறித்த யுவதி தனது பணியிடத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது காணாமல்போயிருந்தார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரியவந்தது.
ஆடுகளுக்குப் புல் வெட்டுவதற்காகச் சந்தேகநபர் சென்ற போது, குறித்த யுவதியைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
அதற்கு அவர் மறுத்ததால், அவரைக் காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்றார் எனச் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தை அதே இடத்தில் புதைத்தார் என்று சந்தேகநபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.