யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் சிறுவர்களைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ். பொலிஸார் இந்தத் தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
நாவாந்துறைப் பகுதியில் இன்று காலை, சிறுவர்களைக் கடத்தும் நோக்குடன், அப்பகுதியில் நடமாடினார் என ஒரு நபரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
மக்களால் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்நபர் மனநிலை பாதிக்கப்படவர் எனத் தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார் என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினரால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும், கடத்தல் முயற்சிகள் நடைபெற்றமையால், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.