பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் இன்று காலை யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் இ.ஆர்னோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதிக் கிளைக் கூட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற போதே ஆர்னோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று முற்பகல் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதிக் கிளைக் கூட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை ஆர்னோல்ட் மேற்கொண்டார் என்று காயமடைந்த நபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.