சமையல் எரிவாயு விலை குறைவடைந்துள்ளதால் வெதுப்பக (பேக்கரி) உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது. 75 சதவீத வெதுப்பகங்களின் பணிகள் மின்சாரத்தில் தான் முன்னெடுக்கப்படுகின்றன என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி உணவு பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளை நாங்கள் ஒருபோதும் அதிகரிக்கவில்லை. மின்சாரம் கட்டணம் அதிகரிப்பு, கோதுமை மா விலை, முட்டை உட்பட மூல பொருட்களின் விலை அதிகரிப்பால் வெதுப்பக உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவடைந்துள்ளதால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது. நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பகங்களில் 25 சதவீதமான வெதுப்பகங்கள் மாத்திரமே எரிவாயு சிலிண்டர் ஊடாக தமது உற்பத்தி பணிகளை முன்னெடுக்கின்றன.
அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால் தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
கோதுமை மா உட்பட மூலப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். இவ்விடயம் தொடர்பில் வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றார்.