கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு விடையளிக்கும் போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை, தொடங்கஹவத்த – பெத்மேகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளான நேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்று அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தோற்றும் போது மலசலகூடத்துக்குச் செல்ல வேண்டும் என்று சந்தேகநபர் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார் எனவும், அதன்படி சிறைச்சாலை அதிகாரி சந்தேகநபரை பரீட்சை மண்டபத்துக்கு அருகிலுள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சிறை அதிகாரியைத் தள்ளிவிட்டு அவர் தப்பியோடிவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சப்புகஸ்கந்த பொலிஸார் சிறுவனைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.