செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வின்றேல் தொழிற்சங்க நடவடிக்கை | GMOA

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வின்றேல் தொழிற்சங்க நடவடிக்கை | GMOA

1 minutes read

நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். நாளை திங்கட்கிழமை கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்கையில்,

நாட்டில் பாரியளவு வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் மனித வலுவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தகுதிகளை நிறைவு செய்துள்ளவர்களுக்கான நியமனத்தை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கான தகுதிகளை நிறைவு செய்துள்ள 400 பேர் தமக்கான நியமனத்துக்கான காலம் கடந்தும் அவற்றை பெறாமல் உள்ளனர். சிரேஷ்ட வைத்தியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரேனும் புதியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கமும், இலங்கை மருத்துவ சபையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைமை மே மாத இறுதியில் ஏற்படும் என்பதை நாம் இதற்கு முன்னரே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

2014 மற்றும் 2015இல் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நிறைவு செய்து, வைத்திய பட்டப்படிப்பையும் நிறைவு செய்து காத்திருக்கின்ற மாணவர்களுக்கான நியமனங்களே தாமதப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சுமார் 8 ஆண்டுகளாக மனத வளங்கள் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள, ஆனால், மேற்கூறப்பட்டவர்களை விட தகுதி குறைவானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே அடுத்த வாரத்துக்குள் சுகாதார அமைச்சு இதற்கான தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை அவசர மத்திய குழு கூட்டம் கூடவுள்ளது. இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தை நாளை அறிவிப்போம். தீர்க்கமான முடிவொன்றையே நாம் எடுப்போம் என்பதை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More