ஈழத்தின் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் அறிமுக விழா, இலண்டனில் Alperton community schoolஇன் பிரமாண்ட அரங்கில் நூற்றுக்கணக்கான மக்களின் வருகையுடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
‘வணக்கம் இலண்டன்’ இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நிகழ்வை திரள் அமைப்பும் இணைந்து முன்னெடுத்தது. அத்துடன் கிளி பீப்பிள் அமைப்பும் இதற்கான ஆதரவை வழங்கியது.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து, அரங்கை நிறைத்து, தாயகப் படைப்பாளியின் படைப்பைக் கொண்டாடினர்.
நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், முக்கிஸ்தர்கள் மங்கல விளக்கேற்ற, நிகழ்வுத் தொகுப்பை துவாரகி நிலக்சன் வழங்கினார்.
இந்த நிகழ்வை திரள் அமைப்பின் செயற்பாட்டாளர் – ஊடகவியலாளர் – விமர்சகர் பா. நடேசன் தலைமை தாங்கி நடத்தினார்.
நிகழ்வில் முதலில் படைப்பிலக்கியத்தில் தீபச்செல்வன் என்ற தலைப்பில் ஈழத்து இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, ‘பயங்கரவாதி’ நாவல் குறித்து அரசியல் செயற்பாட்டாளரும் விமர்சகருமாகிய சாரா ராஜன், ஊடகவியலாளரும் மெய்வெளி தொலைக்காட்சி இணை இயக்குனருமான சாம் பிரதீபன் ஆகியோர் பேச்சுக்களை நிகழ்த்தியிருந்தனர்.
அத்துடன் குறித்த நிகழ்வில் தாயகப் படைப்பாளி தீபச்செல்வன் நேரடியாகக் கலந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இயலாத நிலையில் தொலைபேசி வழியாக தீபச்செல்வன், நெகிழ்ச்சி மிக்க ஏற்புரையை நிகழ்த்தினார்.
அடுத்து, நிகழ்வில் நன்றி உரையை ‘வணக்கம் இலண்டன்’ இணையத்தின் சார்பில் மிதுனா சுரேஷ் வழங்க, இரவுணவு உபசாரத்துடன் நிகழ்வு இனிதுற நிறைவு பெற்றது.