“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் தெரிவித்த கருத்துக்களில் ஓரளவு உண்மை உள்ளது. அவர் குறிப்பிடத்தக்களவு விடயங்களைச் செய்தும் இருக்கின்றார்.”
– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலண்டனில் ரணில் விக்கிரமசிங்க கூறியதில் ஓரளவு உண்மை உள்ளது. அவர் குறிப்பிட்ட விடயங்களில் சிறிய முன்னேற்றம் உண்டு. அவர் இங்கு இவ்வாறு செய்வது சர்வதேச சமூகத்திடமிருந்து தனக்கு நன்மைகளைப் பெறுவதற்காகத்தான் செய்கின்றாரா என்பது தெரியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் பேசியிருக்கின்றார். 13 இலிருந்து பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் விடயங்கள் நடக்கின்றன. வன உயிரிகள் திணைக்களம், வன வளத் திணைக்களம் என்பன ஆக்கிரமித்த காணிகளை 1985ஆம் ஆண்டுக்கு முந்தையை நிலைமையை வைத்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தொல்பொருள் திணைக்களத்துக்கு வடக்கு – கிழக்கில் தேவையற்று காணிகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். அது நடைமுறையாகி வருகின்றது. அஸ்கிரி மகாநாயக்க தேரர், ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துகின்றீர்கள் என்று கேட்பதிலிருந்து இந்த விடயம் உறுதியாகின்றது.
ஜனாதிபதி சில விடயங்களைச் செய்தது என்பது உண்மை. அது எங்களுக்கு எப்படி நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் 10 அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர் என்று நீதி அமைச்சர் கூறியிருந்தார். இதுதான் நிலைமை.” – என்றார்.