செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டை மீட்கச் சகலரும் ஒன்றிணைவோம்! – ரணில் அழைப்பு

நாட்டை மீட்கச் சகலரும் ஒன்றிணைவோம்! – ரணில் அழைப்பு

3 minutes read

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை பணிப்பாளர் சபையின் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

கடன் நீடிப்பு முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அது குறித்து அமைச்சரவை, வங்கியாளர்கள், வணிக சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ், சிங்களம், முஸ்லிம் உள்ளிட்ட மூவின மக்களும் தமது நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதை விரும்புவதில்லை. பிரஜைகள் என்ற அடிப்படையிலும் மேற்படி பெயரை போக்கிக்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் காலநிலை சுபீட்சத்துக்கான வேலைத்திட்டத்தை அறிவித்திருந்தோம். அதனை நடைமுறைப்படுத்தப் போதியளவு வளங்கள் இல்லை என்பதால் ஒரு தொகுதி வளங்களை அரசு வழங்கவுள்ள அதேநேரம் மிகுதி வளங்களைத் தனியாரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவே அரசு எதிர்பார்க்கின்றது.

நாம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தவறும் பட்சத்தில் உலக வங்கியிடமிருந்து எமக்குக் கிடைக்கவிருக்கும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்காமல் போகலாம். அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களும் தோல்வியடையும்.

மேலும், பிரான்ஸில் இடம்பெற்ற புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்தம் தொடர்பிலான மாநாட்டில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கும் கடன் மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றி பேசப்பட்டது. கடன் நெருக்கடியிலிருக்கும்போது காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பது கடினமானதாகும்.

மேற்படி துறை தொடர்பில் நாம் வழங்கியுள்ள பங்களிப்பு மற்றும் துறைசார் விடயங்களில் நாம் கண்டுள்ள வெற்றிகளின் பலனாகவே மேற்படி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இலங்கையினால் கடன் நிலைப்புத் தன்மை மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான விடயங்களில் அதிகளவிலான சாத்தியப்பாடுகளைக் காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கையிடம் தற்போது முன்னேற்றத்துக்கான நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளமையால் அதற்காக முதலாவதாக நாம் கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள முடியும். நாம் இது தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்தாலோசித்தோம். அதேபோல் வங்கியாளர்கள், வணிகச் சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து மேற்படி விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதனால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் பற்றி உங்களது அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி என்பதால் இது குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் அவர்களை அறிவுறுத்துங்கள்.

தற்போதைய நிலையிலிருந்து நாடு மீண்டு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்பதோடு, எதிர்காலத்திலும் போட்டித்தன்மை மிக்கதான பொருளாதாரம் ஒன்றை கட்டமைக்க வேண்டியதும் அவசியமாகும்.

அதேபோல் தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய வர்த்தக கூட்டிணைவான RCEP அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை எதிர்வரும் நாட்களில் சமர்பிக்கவுள்ள அதேநேரம், இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுகளை முன்னெடுத்துள்ளோம். மறுமுனையில் ஐரோப்பிய சங்கத்துடன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் பேசவிருக்கும் நிலையில் அதுவே எமது போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான ஆரம்ப புள்ளியாக அமைந்திருக்கும்.” – என்றார்.

ஜனாதிபதியின் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்வும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More