மாநகர சபைகள் சட்டத்தை திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைப்பது ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது. கபுடாவின் நிழலின் செயற்பாட்டை நீதிமன்றத்தில் நிச்சயம் சவாலுக்குட்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைப்பது அரசியலமைப்புக்கு முரணானது. இதற்கு பாராளுமன்றம் எவ்வாறு அனுமதி வழங்கும் என எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபாநாயகரை நோக்கி வினவினார்.
தனிநபர் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை நோக்கி குறிப்பிட்டார்.
சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (5) இடம்பெற்ற அமர்வின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட மாநகர சபைகள் சட்டத்தை திருத்துவதற்காக தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார். இதன்போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது,
அப்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதி நிர்ணயிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், தற்போது கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைத்தல் தொடர்பிலான தனிநபர் பிரேரணையை ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ளார். இது அரசியலமைப்புக்கு முரணானது. இதற்கு இடமளிக்கக்கூடாது என்றார்.
இதன்போது உரையாற்றிய சபாநாயகர் உரிய தனிநபர் பிரேரணை தொடர்பில் அமைச்சின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதனை தொடர்ந்து, எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் நிதி இல்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் கூட்டு சூழ்ச்சியுடன் தேர்தலை பிற்போட்டுள்ளது. மக்களாணையை மீறியுள்ள அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் எதிர்காலத்தில் பொறுப்புக்கூற வேண்டும்.
கபுடாவின் யோசனைக்கு அமைய கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைக்கும் யோசனை தற்போது தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ளது. கபுடாவின் முகவரே இவ்வாறு செயற்படுகிறார். போராட்டம் கபுடாவை விரட்டியது. கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை கபுடாவின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் கூட்டுவது கேலிக் கூத்தானது. பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களை, தேர்தலை நடத்தாமல் மீண்டும் கூட்டும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்றார்.
அடுத்ததாக, எழுந்து உரையாற்றிய எஸ்.எம்.மரிக்கார் பல தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணைக்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த தனிநபர் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதா என்றார்.
சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இதன்போது கூச்சலிட்டனர். அவ்வாறாயின், நீதிமன்றம் செல்லலாம் தானே என எஸ்.எம்.மரிக்கார் வினவினார். அதற்கு நீதிமன்றம் செல்லலாம் என சபாநாயகர் பதிலளித்தார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், அமைச்சர் விரும்பும் காலத்துக்கு உள்ளூராட்சி மன்றங்களை கூட்டமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புக்கு முரண் என்றார்.
அதனையடுத்து உரையாற்றிய சபாநாயகர், நீதிமன்றம் செல்லுங்கள், பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்றார்.