வட்டிவீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கி மேற்கொண்டுள்ள தீர்மானம் வணிகங்களின் நம்பிக்கையை விரிவுபடுத்தும் எனவும், வணிக முயற்சியாளர்களுக்குப் பெரிதும் நன்மையளிக்கும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையகாலங்களில் பணவீக்கத்தில் மிகத்துரிதமான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதன் விளைவாக, துணைநில் வைப்புவசதிவீதம் மற்றும் துணைநில் கடன்வசதிவீதம் ஆகியவற்றை மேலும் 200 அடிப்படைப்புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாகக் குறைப்பதாக இலங்கை மத்திய வங்கி நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இவ்வறிவிப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் இத்தீர்மானம் வணிகங்களின் நம்பிக்கையை மேலும் விரிவுபடுத்துமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இவ்வட்டிவீதக்குறைப்பு நிதியீட்டலுக்கான வாய்ப்பை இலகுபடுத்தியிருப்பதன் விளைவாக இதன்மூலம் வணிக முயற்சியாளர்களும், சிறிய மற்றும் நடுத்தரளவிலான முயற்சியாண்மைகளும் நன்மையடையுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இத்தீர்மானமானது ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளையும் வலுப்படுத்தும் எனவும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை, விரைவான மீட்சிக்கு உதவும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதை அனுபவிப்பது மிகவும் சிறப்பானதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.