பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று கூறும் அவர் முதலில் சரித்திரத்தை சரியாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் சாடியுள்ளனர்.
‘குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகின்றார்கள். ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணையவேண்டும்’ என வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்தை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சரத் வீரசேகர எப்போதும் இனவாத கருத்துக்களையே வெளியிட்டுவருவதாக சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, ‘குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னணியிலேயே, அதனை பார்வையிடுவதற்காக நீதிபதி அங்கு பிரசன்னமானார்.
அவ்வாறிருக்கையில், தனது பணியைச் செய்த நீதிபதியொருவரை பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி இவ்வாறு விமர்சிப்பது ஏற்புடையதல்ல’ என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
அதேவேளை இதுபற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தன்னை ஒரு சிங்கள அபிமானியாகவும், சிங்கள தேசியவாதியாகவும் காண்பித்துக்கொள்ளும் சரத் வீரசேகர கூறுகின்ற கருத்துக்களை தாம் ஏற்றுக்கொள்வதில்லை என்றும், சரித்திரத்தை அறிந்துகொள்ளாமல் ‘இலங்கை சிங்கள பௌத்த நாடு’ என்று அவர் கூறுவது அவரது அறியாமையையே காண்பிக்கிறது என்றும் தெரிவித்தார்.
‘சரத் வீரசேகரவுக்கு தன்னை ஒரு சண்டியர் போன்று காண்பித்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்ற அவர், முதலில் சரித்திரத்தை அறிந்துகொள்ளவேண்டும். துட்டகைமுனு சிங்களவர் அல்ல என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரே விடயத்தை நூறு முறை கூறுவதால் அது உண்மையாகிவிடாது. அதேபோன்று நீதிபதியை அவமதிக்கும் விதமாக சரத் வீரசேகர கூறியிருக்கும் கருத்துக்கள் மிக மிகக் கேவலமானவையாகும்’ என்றும் விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டார்.
மேலும், ‘பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள இனவெறிக்கருத்தை கடுமையாக கண்டிக்கிறோம்’ என்று குறிப்பிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் இதுபற்றி மேலும் கூறியதாவது:
குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாக பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகை தந்திருந்த அன்று நானும் அவ்விடத்தில் இருந்தேன். அன்றைய தினம் நீதிபதி சரத் வீரசேகரவை அப்பகுதியிலிருந்து வெளியேற்றவோ அல்லது பார்வையிட தடை விதிக்கவோ இல்லை. மாறாக, அங்கிருந்து வெளியே வந்து கருத்துக்களை வெளியிடுவதற்கு மாத்திரமே அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் இத்தகைய கருத்தை வெளியிடுவது என்பது நீதிபதியை அச்சுறுத்தி, அவர் சுயாதீனமாக செயற்படுவதை தடுப்பதுடன் இவ்வழக்கு விசாரணைகளிலிருந்து அவரை விலகச்செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவின் இக்கருத்துக்கள், இலங்கையின் அரச இயந்திரம் எந்தளவுக்கு இனவெறிப்போக்கில் இயங்குகிறது என்பதற்கான பிந்திய உதாரணமாகும்.
எனவே, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படும் சரத் வீரசேகர உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும் என்பதுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.