அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் அடுத்த வாரத் தொடக்கத்தில் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருப்பதுடன், இம்முயற்சியில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இக்கடிதம் தயாரிக்கப்பட்டு, அதில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயகப் போராளிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளின் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அதேவேளை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடமும் இக்கடிதம் கையளிக்கப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், நிரந்தர அரசியல் தீர்வினை எட்டுவதற்கும் அழுத்தம் பிரயோகிக்குமாறு அக்கடிதத்தின் ஊடாக பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும், இம்முக்கிய விடயம் தொய்வடைந்துவிடக்கூடும் என்பதனால் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட இன்னபிற பிரச்சினைகள் தொடர்பில் இக்கடிதத்தில் ஆழமாக வலியுறுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், இக்கடிதத்தை திங்கட்கிழமை (10) அல்லது செவ்வாய்க்கிழமை (11) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இக்கடிதத்தில் இன்று சனிக்கிழமை (8) கையெழுத்திட்டதாக உறுதிப்படுத்திய சி.வி.விக்னேஸ்வரன், அடுத்த வார தொடக்கத்தில் கடிதம் அனுப்பிவைக்கப்படும் என்றார்.
அதேவேளை இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பிவைக்கும் விவகாரம் தொடர்பில் இன்று (8) தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருப்பதுடன், அடுத்த வாரம் கொழும்பில் சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.