பாராளுமன்றத்தை முற்றுகையிட அழைப்பு விடுத்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் வாக்குமூலம் கூட பெறாமல் இருப்பது கவலைக்குரியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மக்களாதரவுடன் ஆட்சிக்கு வர முடியாத அரசியல் கட்சிகள் ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தார்கள். இறுதியில் அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் மாத்திரமே தீக்கிரையாக்கப்பட்டன.
முறைமை மாற்றம் என்பதை குறிப்பிட்டுக் கொண்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தாம் ஏன், எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பதை போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. முறைமை மாற்றம் இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தது.
காலி முகத்திடல் போராட்டம் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. போராட்டத்தின் போது எமது வீடும் தாக்குதலுக்குள்ளானது. நான் வளர்த்த நாயை எடுத்து சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆனால் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு, தீ வைப்போம் என பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அழைப்பு விடுத்த தரப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் அவர்களிடமிருந்து வாக்குமூலம் கூட பெறாமல் இருப்பது கவலைக்குரியது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு மாற்றீடாகவே ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதி சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைக்கும், எமது அரசியல் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் புதிய லிபரல்வாத பொருளாதார கொள்கை நடுத்தர மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டும் என்றார்.