செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 1983 கறுப்பு ஜூலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவால் | நீதியமைச்சர்

1983 கறுப்பு ஜூலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவால் | நீதியமைச்சர்

1 minutes read

நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது.

ஒருசில அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தோளில் சுமந்து இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியில் பல விடயங்கள் கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ளது.கறுப்பு ஜூலை சம்பவத்தை துரதிஷ்டவசமானதாக கருத வேண்டும்.

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இருந்து அரசியலமைப்பு ஊடாக இனவாரி ரீதியில் மக்கள் வேறுப்படுத்தப்பட்டார்கள்,பிரதேசவாரியாக மக்கள் வேறுப்படுத்தப்பட்டார்கள்.மக்கள் மத்தியில் இனவாதம் தோற்றம் பெறுவதற்கு அது ஆரம்பமாக இருந்தது.

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள்,அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்துக் கொண்டு சென்றார்கள். இதனால் இலங்கையில் வாழ்ந்த மக்கள் இலங்கையர் என்ற அபிமானத்துடன் வாழ முடியாமல் போனது.1977 ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெற்ற போது நாட்டில் பல்வேறு பகுதியில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இடம்பெற்ற இனகலவரம் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை அமைத்தது. இலங்கையர் என்ற அடிப்படையில் இருந்துக் கொண்டு சிந்திப்பதை விட சிங்களவர்,தமிழர்,முஸ்லிம் என்ற வரையறைக்குள் இருந்துக் கொண்டு செயற்படும் நிலை தோற்றம் பெற்றது. இவ்வாறான நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்ற முடியாது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு,தேசிய நல்லிணக்கம் உள்ளிட்ட காரணிகளுக்காக பல்வேறு திட்டங்களுக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்,தேர்தல் செலவினங்களை ஒழுங்கப்படுத்தல், ஊழல் எதிர்ப்பு சட்டம் என்பனவற்றை இயற்றிக் கொண்டோம்.

கறுப்பு ஜூலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்குதல் பிரதான சவாலாக உள்ளது.இதற்காக காணாமல் போனோர் அலுவலகம்,நல்லிணக்க காரியாலயம் மற்றும் நட்ட ஈடு வழங்கல் காரியாலயம் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

தென்னாபிரிக்கா நாட்டின் மாதிரியிலான வகையில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நடவடிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளினால் பல தீர்மானங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. கறுப்பு ஜூலை சம்பவம் இலங்கையில் அல்ல உலகில் எந்த நாட்டிலும் தோற்றம் பெற கூடாது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More