மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் தண்ணீர் பௌசர் மோதி 6 வயது சிறுவன் சாவடைந்தார்.
நேற்று (29) மாலை இடம்பெற்ற இந்த விபத்தால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள், குறித்த பௌசருக்குத் தீ வைத்தமையால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்ற சலீம் ருஸ்திக் என்ற சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
சைக்கிளில் மாலை நேர வகுப்புக்குத் தனது சகோதரனுடன் சென்ற குறித்த சிறுவன், தண்ணீர் ஏற்றி வந்த பவுஸர் பின்நோக்கிச் சென்றபோது அதனுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்.
மதுபோதையில் இருந்த பௌசரின் சாரதியும், உதவியாளரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பிரதேச மக்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.