கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை கொழும்பு, மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, வாழைத்தோட்டம் மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியில் நின்றிருந்த இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கொழும்பு 12, சோண்டஸ் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட வந்த நிலையில் குறித்த துப்பாக்கிபிரயோகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 30 வயதுடைய கொழும்பு, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த சந்தேக நபர்களால் துப்பாக்கிதாரிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து குறித்த மோட்டார் சைக்கிளிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இவ்வருடத்தில் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 40 துப்பாக்கிச்சூட்டுப் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைவாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம், பாதாளக்குழு செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகள் துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை இடம்பெற வழிவகுக்கின்றன.