நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது கணவர் மற்றும் மகளுடன் நாட்டுக்கு வருகை தந்த சீன பிரஜையே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் நாவலப்பிட்டி இங்குருஓயா ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் வைத்து தொலைபேசி ஊடாக இயற்கை காட்சிகளை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சீன பிரஜையின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன், அவரது கையிலும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இதனையடுத்து, மேற்கொண்ட விசாரணையில் இங்குறு ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.