செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திப்போம்! – மனோ அணி தகவல்

ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திப்போம்! – மனோ அணி தகவல்

1 minutes read

“முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துகொள்ளச் செல்கின்ற கூட்டணி எம்.பிக்கள் கொழும்பில் இருக்கப்போவதில்லை என்பதால் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதாகச் சொல்லப்பட்ட கலந்துரையாடலில் கலந்துககொள்ள முடியாமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் நேரடியாகத் தெரிவித்து விட்டேன். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த வாரம் உசிதமான ஒரு தினத்தில் சந்திப்போம் என்று என்னிடம் நேரடியாகப் பதிலளித்து விட்டார்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (11) ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களைச் சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்குச் சாத்தியமான தீர்வுகளை நேர்மையாகத் தேடும் அதேவேளை, மலையகத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் பிரத்தியேகமாக அனைத்து மலையக எம்.பிக்களையும் சந்திக்கும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்குகி கூட்டணிக்கு, அறிமுகமில்லாத ஒரு புதிய தலைவர் அல்ல. அத்துடன் இன்றைய ஒரே நாள் சந்திப்பில் மலையகத்தின் 200 வருடப் பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து விடும் என்றும் எவரும் விளையாட்டாககூட எதிர்பார்க்க முடியாது. ஆகவே, தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று (11) நடைபெற இருந்த எமது சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு விட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்தது.

நேற்று (10) நாடாளுமன்றத்தில் நாம் கொண்டு வந்த மலையகம் – 200 முழுநாள் விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்த்தரப்பு, ஆளுந்தரப்பு எம்.பிக்கள் அனைவரும் மலையக மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என மிக உறுதியாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு மிக சாதகமான சூழலையும், புதிய பல எதிர்பார்ப்புகளையும் உருவாகியுள்ளது.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பரந்துப்பட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட பின்வரும் கலந்துரையாடலை நடத்தவே நாம் விரும்புகிறோம்:

01. மலையகத்தில் வீடு கட்டி வாழவும், வாழ்வாதார தொழிலுக்குமான காணி உரிமை
02. பெருந்தோட்ட குடியிருப்புகளை அரச பொது நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவது
03. இந்திய அரசு உறுதியளித்துள்ள இலங்கை ரூ. 300 கோடி நன்கொடை பயன்பாட்டுத் திட்டம்
04. சமூக சபை என்ற மலையக மக்களுக்கான அதிகாரப் பகிர்வு
05. பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையிலான நீண்டகால குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு

– ஆகியவை பற்றிப் பேசவே தமிழ் முற்போக்குக் கூட்டணி விரும்புகின்றது. இது பற்றி நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிக்கவுள்ளோம்.

அந்த அதிகாரபூர்வ கலந்துரையாடலில், அனைத்து மலையக எம்.பிக்கள், கட்சிகள் கலந்துகொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். மற்றபடி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள், எம்.பிக்கள் ஜனாதிபதியைப் பிரத்தியேகமாக சந்திப்பது சர்வகட்சி மாநாடு அல்ல. அது அது எமக்குத் தொடர்பற்ற அரச உள்விவகாரம்.” – என்றார்.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More