“மக்களைக் கொல்லும், மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசுடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சி இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று (16) நடைபெற்ற எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்தச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசு கலந்துரையாடிய போதிலும் முறையான மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளது. இப்படியான பொய்யான மோசடி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசுடன் இணைந்துகொள்ள நாங்கள் தயாராக இல்லையென்றாலும், நாட்டுக்குச் சாதகமான மற்றும் சரியான முடிவுகள் எடுக்கப்படும் இடத்தில் பதவிகள், சலுகைகளை நிராகரித்து சரியான நிலைப்பாட்டில் நிற்கின்றோம்.
நாடு தற்போது மக்கள் ஆணையற்ற, நம்பிக்கையற்ற அங்கீகாரம் இல்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசால் ஆளப்படுகின்றது. நாட்டையே வங்குரோத்தாக்கிய கும்பலை வைத்து அரசியல் நாடகம் ஆடி குழுவாத பூசல்களை உருவாக்கி நாட்டின் தேச நலனைக் கருதாமல், தங்கள் தனிப்பட்ட பேராசையின் அடிப்படையில் பதவிகள் மற்றும் சலுகைகளுக்குப் பேராசை கொண்ட கொள்கையற்ற ஆட்சியை நாட்டில் நடத்தி வருகின்றனர்.
உழைக்கும் மக்களுடனே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது. எனவே, ஊழியர் சேமலாப நிதியங்களில் கை வைத்துள்ள அரசுடன் உடன்பாடுகளை எட்ட முடியாது.
தீர்வுகளைத் தேடும் முற்போக்கான எதிர்க்கட்சி என்ற வகையில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னிற்கின்றோம். மக்கள் ஆணைக்குப் புறம்பாக எந்தப் பதவியையும் சலுகைகளையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை.” – என்றார்.