“திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரை காணிக்குள் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கும் அதிகாரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குக் கிடையாது. பொரலுகந்த ரஜமஹா விகாரை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கிய அறிவுறுத்தலை அரசு ஏற்றுக்கொள்ளாது. பொரலுகந்த விகாரைப் பகுதிக்கு அந்தத் தேரர் செல்லலாம் அங்கு அவர் வசிக்கலாம். அதற்குத் தடையேதும் கிடையாது.”
– இவ்வாறு புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 27/2 இல் கேள்விகளை முன்வைத்த சுயாதீன எதிரணி எம்.பி.யான அத்துரலிய ரத்ன தேரர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
சுயாதீன எதிரணி எம்.பி.யான அத்துரலியே ரத்ன தேரர்,
“திருகோணமலை மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் பட்டிணங்கள் பிரதேச செயலகப் பிரிவு பகுதி தொல்பொருள் மரபுரிமைக்குச் சொந்தமானது. 6 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு 60 பேச்சர்ஸ் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வெல்கம விகாரையின் விகாராதிபதி சீலவங்ச திஸ்ஸ தேரருக்கு இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணியைத் தூய்மைப்படுத்தி அங்கு வசிப்பதற்குத் தேரர் சென்ற போது தமிழர்களில் ஒருசிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்தக் காணிக்குள் உட்பிரவேசிப்பதற்கும், அங்கு வசிப்பதற்கும் தடையுத்தரவு விதிக்குமாறு திருகோணமலை நகரம் மற்றும் பட்டிணங்கள் பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு தடையுத்தரவு விதிக்க கிழக்கு மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளருக்கும் அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியில் வழங்கப்பட்டுள்ள காணிக்குள் உட்பிரவேசிப்பதைத் தடுப்பது சட்டவிரோதமானது. இப்பகுதியில் வாழும் தமிழர்களும், தமிழ்த் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. உயர்மட்டத்தில் இருந்து கொண்டு செயற்படும் ஒரு நபரின் சூழ்ச்சியின் ஊடாகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .
பொரலுகந்த ரஜமஹா விகாரைக்குச் சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விகாரைப் பகுதிக்குள் உட்பிரவேசிப்பதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர் மற்றும் பிரதேச செயலாளருக்கு உள்ளதா ?
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா ?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுவதை அரசு அறிந்துள்ளதா ? அது தொடர்பான தகவல்கள் உள்ளதா ?
சட்டவிரோதமாக மாகாண ஆளுநர் வழங்கிய அறிவுறுத்தலை அரசு ஏற்றுக்கொள்ளுமா?” – என்று கேள்விகளை எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதிலளிக்கையில்,
“பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விகாரைப் பகுதிக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர் மற்றும் பிரதேச செயலாளருக்குக் கிடையாது. பொரலுகந்த விகாரை 13-15- 024 என்ற இலக்கத்தின் கீழ் புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, விகாரை மற்றும் அப்பகுதிக்கு எவரும் செல்லலாம் தடையேதுமில்லை.
பொரலுகந்த ரஜமஹா விகாரை மற்றும் போராட்டம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட பேச்சு இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அரச அதிபர், திருகோணமலை நகரம் மற்றும் பட்டிணங்கள் பிரதேச சபையின் செயலாளர் ஆகிய தரப்பினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுவதை அரசு அறிந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் நாளாந்தம் திணைக்களத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொரலுகந்த ரஜமஹா விகாரை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கிய அறிவுறுத்தலை அரசு ஏற்றுக் கொள்ளாது. பொரலுகந்த விகாரைப் பகுதிக்கு அந்தத் தேரர் செல்லலாம் அங்கு அவர் வசிக்கலாம். அதற்குத் தடையேதும் கிடையாது.” – என்றார்.