செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இனவாதப் பிரச்சினை ஏற்பட இடமளியோம்! – பாதுகாப்பு அமைச்சு உறுதி

இனவாதப் பிரச்சினை ஏற்பட இடமளியோம்! – பாதுகாப்பு அமைச்சு உறுதி

1 minutes read

“இலங்கையில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் ஏற்படும் வகையிலான சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவிலிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், ஒருசில பிரதேசங்களில் ஒருசில குழுக்கள் அரசியல் நோக்கங்களுக்காக இனவாதப் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தக் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.”

– இவ்வாறு தேசிய புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் சபையில் அறிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இலங்கையில் மீண்டும் இனவாத மோதல்கள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்று இன்று (நேற்று) காலையில் சில சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எதிர்க்கட்சித் தலைவரும் இது தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அவ்வாறு, எந்தவொரு வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ தேசிய பாதுகாப்பு தொடர்பிலும், இனவாத முரண்பாடுகள் தொடர்பிலும் எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மிகவும் பொறுப்புடன் இதனைக் கூறுகின்றேன்.

அதேபோன்று, முகப்புத்தகம் போன்றவற்றில் வெளியிடப்படும் கட்டுக் கதைகளுக்கும் எந்நேரமும் எம்மால் பதிலளித்துக்கொண்டும் இருக்க முடியாது. அதனால், இது தொடர்பில் முதலில் நாடாளுமன்றத்துக்குக் கருத்துத் தெரிவிப்பேன். ஆனாலும், தற்போது எமது நாட்டில் ஒருசில இடங்களில் ஒருசில குழுக்கள் அரசியல் நோக்கங்களுக்காக நாட்டில் இனவாதப் பிரச்சினையை உருவாக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக எமது புலனாய்வுப் பிரிவு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அந்தக் குழுக்கள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவும் அரசும் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் என்பவர் குருந்தி விகாரை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி வருபவர். அவர் ஒரு கத்தோலிக்கர். இந்த விடயத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். ஆனால், இந்த விடயத்தில் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மேலும், குருந்தி தொல்லியல் காணியினூடாக பௌத்தத்தின் எதிர்காலமோ அல்லது இந்து சமயத்தின் எதிர்காலமோ தீர்மானிக்கப்படப்போவதில்லை. 30 வருட கால யுத்தத்தைக் கடந்தும் இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இன்னும் இனவாதப் பிரச்சினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு எங்களின் கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எது எவ்வாறாயினும் அவ்வாறான இனவாதப் பிரச்சினையை உருவாக்கப் புலனாய்வுப் பிரிவும், பாதுகாப்புப் பிரிவும், அரசும் இடமளிக்காது.” – என்றாா்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More