செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா | இறுதிப் போரின்போது கொழும்பில் கடமையாற்றியவர்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா | இறுதிப் போரின்போது கொழும்பில் கடமையாற்றியவர்

1 minutes read

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில்  வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அமெரிக்க – இந்திய அணு ஆயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More