முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்திருந்து பயணித்த இளம் குடும்பப் பெண் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 25ஆம் திகதி அந்தப் பெண், புதுக்குடியிருப்பில் இருந்து தேவிபுரத்தில் உள்ள வீட்டுக்குத் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார்.
இதன்போது வீதியில் சென்ற ஓட்டோவை முந்துவதற்கு முயற்சித்தவேளை, மோட்டார் சைக்கிளின் கைபிடி ஓட்டோவில் தட்டுப்பட்டது. இதன்போது அவர்கள் இருவரும் கீழே விழுந்தபோது இளம் குடும்பப் பெண் சம்பவ இடத்தில் மயக்கமுற்றார்.
அதன்பின்னர் அந்தப் பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இறுதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (28) அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சுஜீவன் வசந்தமலர் (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.